/indian-express-tamil/media/media_files/fVJCMDkBWX5bcK7ptgWV.jpg)
கைது செய்யப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் தங்கள் போராட்டதை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 1 வாரமாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (டி.பி.ஐ வளாகம்) பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். அதேபோல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித் தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக் கோரியும் போராட்டம் நடத்தினர்.
போராடி வரும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று(அக்.4) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று (அக்.5) கைது செய்தனர். ஆசிரியர்களை பேருந்தில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் திருமண மண்டபம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் தங்கள் போராட்டதை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அறிவித்தார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.