சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி திங்கள்கிழமை (24.03.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அப்போது பார்த்திபன் பேசியதாவது: “நான் சிகரெட் பிடிக்கமாட்டேன். நடிக்கும்போதுகூட, ‘உங்களுக்கு சரியாக சிகரெட்கூட பிடிக்கத் தெரியவில்லை’ என்று சக நடிகைகள் கூறுவார்கள். எனக்கு சிகரெட் பழக்கம் இல்லாததற்குக் காரணம் என்னுடைய அப்பா. அவர் நிறைய பீடி பிடிப்பார். அவர் குடித்த பீடியின் பெயர் ’கவர்னர்’ பீடி. தயவுசெய்து இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது ஜோக் அல்ல. அந்தக் காலத்தில் இப்படியொரு பீடி இருந்தது. ஆனால், இப்போது அது இல்லை. இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால், ஒரு பீடிக்கு பெயர் வைக்கும்போது எப்படி கவர்னர் பீடி என்று பெயர் வைக்க முடியும்? அது எவ்வளவு உயர்ந்த பதவி. அந்தப் பதவியை ஒரு பீடிக்கு பெயராக வைப்பது என்பது வன்முறைய தடுக்கத் தகுந்த விஷயம். அந்த பீடியை என் அப்பா என்னைப் போய் வாங்கிவரச் சொல்வார்.
அதைக் குடித்து கடைசிக் காலத்தில் எனது அப்பா கேன்சர் வந்து இறந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.” என்று பார்த்திபன் கூறினார்.
தொடரந்து பேசிய நடிகர் பார்த்திபன், “காசநோய் வருவதற்கான காரணங்களில் புகைபிடிப்பதும் ஒன்று என்பதால் இதைச் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிகமிக முக்கியமானது. நிகழ்ச்சியில் தமிழ் அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக ஆளுநருக்கு என்னுடைய மரியாதையை தெரியப்படுத்துகிறேன். நான் தமிழில் பேசியது, ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார், அவருக்கு புரியும். அதனால், தைரியமாக தமிழிலேயே பேசலாம் என்று சொன்னார்கள். ஆகவே, தமிழ் புத்தகங்களை அவருக்கு நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் அவன் யார் என ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது” என்று பார்த்திபன் கூறினார்.
உலக காசநோய் தினம் குறித்து ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்ப்பதாவது: “உலக காசநோய் தினத்தில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஏராளமான சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ஆளுநர் ரவி அவர்கள், விரிவான பொது சுகாதார அணுகுமுறை மூலம் காசநோயை எதிர்ப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.
சமூகத்தின் மகத்தான உள்ளார்ந்த வலிமையை வலியுறுத்திய ஆளுநர், காசநோய்க்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான போராட்டத்தை விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கட்டுக்கதைகளை பொய்யாக்குதல் மற்றும் ஆழமாக வேரூன்றியுள்ள தடங்கல்களை உடைத்தல் போன்ற வழிகளில் தீவிரப்படுத்த மேலதிக பொதுமக்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுக்கு வலுவான அர்ப்பணிப்பு தேவை என்றும் காசநோய் இல்லா இந்தியா மற்றும் ஃபிட் இந்தியா போன்ற நோக்கத்துக்கு அவை ஓர் அத்தியாவசியமான படி என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.” என்று குறிப்பிட்டுள்ளது.