தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க கடந்த வாரம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்றார். மே 25ம் தேதி தூத்துக்குடி சென்ற அவரை விமான நிலையத்தில், போலீசார் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் விழுப்புரம் போலீசார் அங்கு விரைந்து வேல்முருகனை, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய சம்பவத்திற்காகக் கைது செய்தனர். காவிரி விவகாரத்தில் கடந்த மாதம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார் வேல்முருகன் மற்ருமவரது கட்சியினர். வேல்முருகனை 15 நாள் காவலில் வைக்க திருக்கோவிலூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதால் அவரைக் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
வேல்முருகனின் கைதை கண்டித்து கொடிகம்பம் பகுதியைச் சேர்ந்த கட்சியின் தொண்டர், நேற்று இரவு மன்னெண்ணை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் ஜெகன் 30 வயதானவர். இவர் இக்கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்தவர். சமீபத்தில் வேல்முருகனின் பேட்டியை பார்த்த இவர், மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதன் விளைவாக, வேல்முருகனின் கைதை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு தீக்குளித்தார். இவரைக் காப்பாற்ற மருத்துவமனைக்குச் சொண்டு செல்லும் வழியிலேயே பலியானார்.
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஜெகனுக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த வழக்கை போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.