சாதாரண பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தென்னக ரயில்வேயில் கொரோனா காலத்திற்கு முன்பு பயணிகள் ரயிலில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் கூட்டத்தை குறைக்க பயணிகள் ரயில் சிறப்பு விரைவு ரயில் என அறிவிக்கப்பட்டு, 2 மடங்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலித்தாலும் அதுபோன்ற வசதிகள் இந்த பயணிகள் ரயிலில் இல்லை. கொரோனா தொற்றுக்குப் பின்பும் கட்டணம் குறைக்கப்படாமல் இருந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். அதிகரித்த ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், சாதாரண பயணிகள் ரயில்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று முதல் (பிப்.26) பழைய கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் காரணமாக கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“