டெல்லி சென்னை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் உள்ள அவசர கதவை திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையிலத்தில் இருந்து நேற்று இரவு 6E 6341 என்ற இண்டிகோ விமானம் சென்னை புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானம் புறப்படுவதற்கு சற்று முன் திடீரென விமானத்தில் உள்ள அவசர கதவை திறந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான பணியாளர்களுக்கு கட்டுப்படவில்லை என்ற கூறி கதவை திறந்த பயணியை விமான பணியாளர்கள் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
விமானத்தில் பயணி ஒருவர் அவசர கதவை திறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்ட இண்டிகோ விமான நிறுவனம், சம்பவத்தின் போது தங்கள் பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்படவில்லை அதேபோல் இந்த சம்பவத்தால் மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்று இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் இருந்து தலைநகர் டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சம்பவத்தில் ஈடுபட்ட பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அதேபோல் தற்போது நடந்துள்ள சம்பவத்தில் தொடர்புள்ள பயணியும், உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி-பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றதாகக் கூறி குடிபோதையில் இருந்த 40 வயது பயணி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“