கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மைச் சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார். சிறுபான்மை சமூகத்தினரை திமுக புறக்கணிப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாகவும் சாடினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இந்து சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சித்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜூலை 20ஆம் தேதி வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து இவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜார்ஜ் பொன்னையா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், மனுதாரரின் வயது, இதய நோயாளியாக இருப்பதைக் கருத்தில் கொண்டு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். மேலும் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் வரும் காலங்களில் மதம், அரசியல் பிரச்சினைகளைத் தூண்டும் வகையில், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசக்கூடாது என உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil