சென்னையில் கடந்த 2 வாரங்களில் 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களில் சென்னையில் உள்ள 3 மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 22ம் அன்று 30 வயதான பூஜா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மரணமடைந்து விடுகிறார். அய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் பூஜா. இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் பாலாஜி சிங் கூறுகையில் “ மதிய நேரத்தில்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்படும் நேரத்தில் உடலில் ரத்த ஓட்டம் தடைபட்டு ஷாக்கில் இருந்தார். அவரது நாடித் துடிப்பு சீராக இல்லை. அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. சிகிச்சை கொடுத்தும் அவருக்கு பலனளிக்கவில்லை. இரவு 9 மணிக்கு அவர் மரணமடைந்தார்” என்று கூறினார்.
பூந்தமல்லியில் இருந்து அதே மருத்துவமனையில் 15 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் இதற்கு முன்பாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றதாகவும், அவர் இந்த மருத்துவமனைக்கு வந்தபோது, உடல் நிலை மிகவும் மோசமடைந்தால் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் நல மருத்துவமனைகள் மற்றும் மற்ற தனியார் மருத்துவமனைகளில் இருந்து கடந்த 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகள் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த வருடம் 5,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் மரணடைந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறுகையில் “ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மருத்துவரை சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும்” என்று கூறினார். குறிப்பாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த தனியாக எந்த மருந்தும் இல்லாததால், நோயினால் ஏற்படும் அறிகுறிகளை போக்குவதற்குதான் மருந்துகள் கொடுக்கப்படும். இச்செய்தியில் உள்ள தகவல்கள் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில செய்தியில் இருந்து எடுக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“