சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை, அவரது காதல் கணவரிடமிருந்து பிரித்த போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்த நிலையில், அப்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், இவரது மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரின் மகன் நவீன் (19). இருவரும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்திருக்கின்றனர். அப்போதே இந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. எனவே, நவீனின் வீடு தேடி சென்று பெருமாள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். காரணம் நவீன் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர் என்பதுதான்.
பள்ளிப்படிப்பு முடிந்ததையடுத்து ஐஸ்வர்யா திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். நவீனும், திருப்பூரில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இப்படி இருக்கையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். சமீபத்தில் திருமணமும் நடந்திருக்கிறது. ஆனால் திருமணம் நடந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது.
எனவே அவர்கள் ஐஸ்வரியாவை தேட தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தை முன்னரே தெரிந்துகொண்ட காதல் ஜோடி வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். மறுபுறம் பெற்ரோர் புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினரும் காதல் ஜோடிகளை தேடி வந்திருக்கின்றனர். பின்னர் ஒருவழியாக வீட்டை கண்டுபிடித்த அவர்கள், ஐஸ்வர்யாவை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.
அங்கு காத்திருந்த பெற்றோர், ஐஸ்வரியாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இதன் பின்னர்தான் ஐஸ்வர்யா மரணம் என்ற அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, இவர்கள் சொந்த ஊர் திரும்பிய அடுத்த நாள் ஐஸ்வரியா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாது, அவரது சடலத்தை பெற்றோர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈராயிரம் ஆண்டுகள் பழமையான, தொன்மை வாய்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் சமூகத்தில் சாதிய ஆணவக்கொலைக்கு முடிவு எப்போது? என சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினர். அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக நவீன் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரில், ஐஸ்வர்யா ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு உடந்தையாக செயல்பட்ட பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு அரசுக்கு 'ஆணவ படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் ' என கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"சாதிய பாகுபாடு காரணமாகவே கொலை நடைபெற்றுள்ளதாலும்,இதனால் இணையரை இழந்தவர் பட்டியலினத்தவர் என்பதாலும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அதுவரை சாதி மறுப்புத் திருமண தம்பதிகளின் பாதுகாப்புக்கு வழங்கிய வழிகாட்டுதல்களில் ஒன்றான 'சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் எந்த காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறார்களோ, அந்தக் காவல்நிலையமே தம்பதிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு' என்பது பல்லடம் காவல்நிலைய ஆய்வாளரால் மீறப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
அதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இதே கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.