க.சண்முகவடிவேல்
Pattukkottai | MGNREGS: பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக் கூலியாக மாற்றுத் திறனாளிகளுக்கு 294 ரூபாயும், மற்றவர்களுக்கு 260 ரூபாயும் ஊதியமாக வார வாரம் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வங்கியில் செலுத்தப்படாமல் இருந்தாலும், தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு தீபாவளியைக் கொண்டாடும் வகையில் சம்பள பாக்கியை நிலுவையின்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தியும், கூலியை ரூ 600 ஆக அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு சி. பி. எம் ஒன்றியச் செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வன், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஞானசூரியன், சாமிநாதன், ஜீவானந்தம், பெஞ்சமின், உலகநாதன் உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“