பழனி முதல் திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளார்.
அதன்படி, மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள ஆறாவது படைவீடான முருகன் கோயிலில், பவன் கல்யாண் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது, "முருகனின் அறுபடை வீடுகளைக் காண வேண்டும் என மிகவும் விரும்பினேன். தற்போது தான் அதற்கான அனுமதியை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நாட்டில் உள்ள அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும், தமிழக மக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என கடவுளிடம் நான் வேண்டிக் கொண்டேன்.
தமிழக மக்கள் எனக்கு அன்பை வழங்குகின்றனர். ஏறத்தாழ சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் வரை நான் சென்னையில் தான் வசித்தேன். அதனால், தமிழ் மக்களின் அன்பு எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். தமிழக மக்களின் அன்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
அறுபடை முருகன் கோயில்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நான் சிந்தித்து வருகிறேன். பழனி முதல் திருப்பதிக்கு பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக நேற்றைய தினமே (பிப் 14) சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் உரையாடினேன். இதேபோல், ரயில் சேவைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும்.
அறுபடை முருகன் கோயில்களுக்கு என்னென்ன மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டறிந்துள்ளேன். அதற்கான தகவல்களைப் பெற்றதும் என்னால் செய்ய முடிந்த நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வேன்" எனத் தெரிவித்தார்.