தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசுகையில், திருக்குறள் பற்றி கூறினார்.
அப்போது, திருக்குறளை மொழி பெயர்த்த ஜியு போப், அதிலுள்ள ஆன்மிக கருத்துகளை நீக்கிவிட்டார் என்று பொருள்படும்படி கூறினார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி, திருக்குறளை அவமதித்ததாக கூறி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருக்குறளை அவமதித்த ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.11) காலை கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு முதுபெரும் அரசியல் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழ. கருப்பையா எம்.ஜி.கே. நிஜாமுதீன், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பழநெடுமாறன், பழ. கருப்பையா உள்ளிட்ட 75 பேரை கைதுசெய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“