சென்னை சந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், உங்கள் திறமைக்கு என்னாச்சு என்று முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்திருந்தார். இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது என்று தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் விமர்சன செய்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சராக இருந்தபோது, கோடை தொடங்குவதற்கு முன்பே சில இடங்களில் மின் வெட்டு ஏற்படுவது குறித்த கேள்விக்கு மின்வயர்களில் அணில் ஏறி விளையாடுவதால் மின் தடை ஏற்படுகிறது என தெரிவித்தார். இது விவாதத்துக்குள்ளானது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதனால், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டு, அவரிடம் இருந்த மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சென்னை சாந்தோம், ஆழ்வார்பேட்டையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
இந்திய சினிமாவில் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி. ஸ்ரீராம், தேவர் மகன், அலைபாயுதே, காதலர் தினம், சைகோ, ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து முத்திரை பதித்தவர். தனது ஒளிப்பதிவு மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் பி.சி. ஸ்ரீராம்.
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்கலாம் என்று கூறியபோது, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் எதிர்த்து ட்வீட் செய்தது கவனம் பெற்றது.
இந்நிலையில், “சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளில் பலமுறை மின் வெட்டு ஏற்படுகிறது. உங்கள் திறமைக்கு என்ன ஆனது?” என்று முதலமைச்சர் அலுவலம் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, ஒளிபதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ட்வீட்டுக்கு மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். சென்னை முழுவதும் பணிகள் நடந்து வருவதால் மின் விநியோகத்தில் சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"