உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறை வசமிருந்த பி.சி.ஆர் கருவிகள் கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்த உள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர் ஆய்வகங்களை பயன்படுத்த உத்தரவிடக் கோரி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள ஆய்வகங்கள் தவிர்த்து, தமிழகத்தில் அறிவியல் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர் ஆய்வகங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.
மஹாராஷ்டிராவில் சிக்கிய தமிழர்களை மீட்பதில் ஏன் தயக்கம்? – ஐகோர்ட் கேள்வி
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..
அதில், உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரோனா தொற்றுக்கு முழுமையான அளவில் தமிழக அரசு சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போதைய நிலையில்
தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் 53 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும் மேலும் புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று; 8 பேர் உயிரிழப்பு
அதே போல, உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை வசமிருந்த 25 பி.சி.ஆர் கருவிகள் கொரோனா பரிசோதனைக்கு ஏதுவாக தற்போது சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே அதிக அளவிலான பி.சி.ஆர் ஆய்வக வசதி உள்ள மாநிலமாகவும்,அதிகப்படியான நபர்களுக்கு பரிசோதனை செய்த மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”