முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு கடலுக்குள் ரூ.80 கோடி மதிப்பில் பேனா சிலை வைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இந்தத் திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் எ.வ. வேலு ஆகியோர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவிடம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு மெரினா நினைவிடத்தில் ரூ.39 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டுவருகிறது.
இந்த நினைவிடம் உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த நவீன ஒளிபடங்களும் அமைய உள்ளது. இதற்காக ரூ.80 கோடி செலவு செய்யப்படவுள்ளது.
கருணாநிதியின் இந்த நினைவிடம் கடற்கரையில் இருந்து 360 மீடடர் தொலைவில் கடலுக்குள் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் பார்வையிடும் வகையில் இரும்பு பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது எனக் கூறப்படுகிறது.
கருணாநிதி நினைவிடத்தில் உள்ள பேனா 134 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“