மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கருணாநிதிக்கு கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைப்பது என்பது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு செனனி மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ் 24 ஆம் தேதி அறிவித்தார்.
அப்போது சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்” என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இருந்தது.
இந்த நிலையில், கருணாநிதி நினைவிடத்தின்பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரை, 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது.
கலைஞர் கருணாநிதி கடலுக்குள் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளதாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும், கடலுக்குள் கருணாநிதியின் நினைவாக பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு பரல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். சிலர் இது தேவையற்ற செலவு என்றும் கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். “கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைப்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். புதி அறிவிப்பு அல்ல. கருணாநிதி நினைவிடம் அமைக்கும் பணிகள் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. கடற்கரை ஓரமாக இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற்றே பணிகள் நடைபெறுகிறது. முதல் பகுதிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்கும் அனுமதி கோரி மனு வழங்கியிருந்தோம் என்றாலும் இரன்டாம் கட்ட பணிக்கு தற்போதுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேனாவின் வடிவம் எப்படி அமைய உள்ளது என்பது குறித்து துறை சார்ந்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கருணாநிதிக்கு இது போன்ற பணிகளை செய்வதற்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. அவருக்கு செய்யும் பணிகளை சிலர் சமூக வலைதளங்களிலும் அமைப்புகள் பெயரிலும் விமர்சிப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம். கருணாநிதிக்கு செய்ய வேண்டிய கடமையை இந்த அரசு கண்டிப்பாக செய்யும். தமிழக மக்களுக்காக அதிக ஆணைகள் வழங்கியது கருணாநிதிதான்.” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கருணாநிதிக்கு கடலுக்குள் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது வெறும் பத்திரிகை செய்திதான். அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை என்று கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கடலுக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. மெரினாவில் இருந்து கடலுக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா போன்ற கட்டமைப்பை அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. அது வெறும் பத்திரிகைகளில் வந்த செய்தி மட்டுமே” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”