திருச்சி - தஞ்சை ரயில்வே மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள மஞ்சத்திடல் ரயில்வே தண்டவாளத்தை இருபுறமும் மக்கள் கடந்து செல்ல மஞ்சதிடல் கேட் எண் 321 மற்றும் விவேகானந்தா நகர் அருகில் கேட் எண் 322 ஆகிய இரண்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி பல மாதங்களாக கட்டுமானப் பணி துவங்கி நிறைவு பெறாமல் உள்ளது.
இதனால், மகாலெட்சுமி நகர், நாகம்மை வீதி, விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், ராஜீவ்காந்தி நகர், இந்திரா காந்தி நகர், தங்கேஸ்வரி நகர், மாஜி ராணுவ காலனி, சோமசுந்தரம் நகர், மூகாம்பிகை நகர், மீனாட்சி நகர், ஆலத்தூர் மேற்கண்ட பகுதியில் வாழும் பொது மக்கள் திருச்சி தஞ்சை சாலையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுடுகாடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு சென்றுவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏழு எட்டு கிலோமீட்டர் சுற்றி சென்றுவரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இரண்டு இடங்களில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்திடக் கோரி இன்று திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அவர்களை சந்தித்து மனு வழங்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி விரைந்து பணியை முடித்திட ஆவணம் செய்வதாய் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், சுப்பிரமணியன், பா.லெனின் மற்றும் மகாலட்சுமி நகர் நல சங்க நிர்வாகிகள் மகேந்திரன், கோபு, சிவராமன் விவேகானந்தா நகர் மகாத்மா காந்தி நினைவு பொதுநல சங்கத்தின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், மோகன் பசலத்கான் நாகம்மை வீதி விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் ராஜகோபால், தர்மலிங்கம், செல்வராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், அவர்கள் இந்த பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணபடவில்லையெனில் அடுத்தகட்டமாக மக்களை திரட்டி போரட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
செய்தி: க. சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"