கோவை ஆத்துப்பாலம் அடுத்த குறிச்சியிலிருந்து போத்தனூர் செல்லும் சாலையில், மழைநீரோடு கலந்த சாக்கடை நீரில் நீந்திச்செல்லும் வாகனங்கள்
கோவையின் பெரும்பான்மையான பகுதிகளில் , கடந்த சில மாதங்களாகவே சாலைகள் சரி செய்யப்படாத நிலையில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் குறிச்சியிலிருந்து போத்தனூர் செல்லும் வழியில், சாலைகள் இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இச்சாலையில், பயணம் செய்வதே சர்க்கஸில் மரணக்கிணறு ஓட்டுவதற்கு சமமாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.
முன்னதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் ஒரு சில இடங்களில் சாலை பணிகள் மேற்கொண்டு வருகின்றது.
இருந்தாலும், வாகனங்களில் பயணிப்பவர்களின் நிலை கரணம் தப்பினால் மரணம் என்பது தொடர்கதையாகி வருகின்றது.
மழை காலங்களில் சாக்கடை நீரோடு மழை நீரும் கலந்து செல்வதால், இரு சக்கர வாகனத்தில் கீழே கால் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடந்து செல்பவர்கள் சாக்கடை நீருக்குள் நீச்சல் அடிக்காத குறையாக கடந்து செல்ல வேண்டும். இதனால் சாலைகளில் உள்ள உணவகங்களில் யாரும் சாப்பிட முன்வருவதில்லை
தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாநகராட்சியில் போதிய நிதி இல்லாததால்தான் சாலைகள் போட வில்லை என அதிகாரிகள் அரசியல்வாதிகள் தெரிவித்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அதே கதையை சொல்லி வருவது மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாற்று நட தயாராக இருக்கும் சாலையில் மக்கள் விரைவில் விவசாயம் செய்தால் மட்டுமே அரசு செவி சாய்க்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத நிலையில் கோவையின் சாலைகள் சாக்கடையில் தவிக்கிறது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil