திருச்சி சென்னை மதுரை உள்பட 16 மாநகராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கும் பல்வேறு பணிகளை அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கு அந்த ஊராட்சிகளில் உள்ள கிராம பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட அதவத்தூர், குமார வயலூர் பகுதிகளை திருச்சி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வீட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வயலூர் சாலையில் சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு நிகழ்ந்தது.
மேலும் கரூர் தோகைமலை வழியாக திருச்சி வரக்கூடிய பயணிகள் பேருந்து சாலை மறியல் போராட்டத்தில் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் திருச்சி மாநகருக்கு வரும் பெரும்பாலான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நினைத்த இந்தப் போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தனியார் வாகனங்களில் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்ம்பித்தது. மேலும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர் என பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
முன்னதாக திருச்சி மாநகராட்சியில் ஏற்கனவே 60 வார்டுகள் இருந்த நிலையில் கூடுதலாக 5 வார்டுகள் அதிகரிக்கப்பட்டு தற்போது 65 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில் வார்டுகளின் எண்ணிக்கையை நூறாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.