/indian-express-tamil/media/media_files/a4ikSx9a36WiJuyUHpzE.jpg)
மயிலாடுதுறையில் இரண்டு வாக்குச்சாவடிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் சாலைமறியல்
மயிலாடுதுறையில் இரண்டு வாக்குச்சாவடிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் கோபமடைந்த வாக்காளர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள 143 மற்றும் 144 ஆகிய வாக்குச்சாவடிகளில் இன்று காலை வழக்கம் போல் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். அப்படி வந்தவர்களில் பலர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பினர். இப்படி சுமார் 200 பேருக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பெயரில்லை என்று கூறப்பட்டதால் அந்த வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த இரண்டு வாக்கு சாவடிகளிலும் 1,189 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், இன்று வாக்களிக்க வந்த மக்கள் பெரும்பாலோனோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாமக, அதிமுக, தி.மு.க கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் கூடினர். தகவலறிந்த பா.ம.க வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் பா.ம.க, பாஜக கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான யுரேகா, மாவட்ட துணை ஆட்சியர் ஷபீர்ஆலம், டி.எஸ்.பி திருப்பதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பா.ம.க வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இது குறித்து புகார் மனுவை அளித்தார். பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களின் திடீர் போராட்டம் மற்றும் அரசியல் கட்சியினர் அப்பகுதியில் திரண்டுள்ளதை அடுத்து அசம்பாவிதம் நேரிடாமல் தடுக்கும் வகையில் மத்திய ரிசர்வ் படை, தமிழக மற்றும் கேரள போலீஸார் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.