பொது வாழ்வுக்கு வருகிறவர்கள் உடல் தகுதி சான்றிதழ் தாக்கல் செய்தால் என்ன? நீதிபதி கிருபாகரன் கேள்வி

பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர், உடல் தகுதி சான்றிதழ் கேட்பது எப்படி தனிப்பட்ட விவகாரமாக இருக்க முடியும்? என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் தகுதி குறித்த மருத்துவ அறிக்கையை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வகை செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘எங்கள் ஊர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் கிராம வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் நான்கு பேருக்கு நான் வாக்களிக்க வேண்டியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் அவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்வது போல, அவர்களின் உடல் நிலை பற்றிய அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு தாக்கல் செய்தால் அவர்களில் சிறந்தவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்ய முடியும். மேலும் தேவையற்ற இடைத் தேர்தல்களை தவிர்க்க முடியும். மக்களின் வரிப்பணம் விரயம் ஆவதை தடுக்க முடியும் . இது தொடர்பாக கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் தேர்தல் ஆணையம் கூறவில்லை.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் உடல் தகுதி குறித்த மருத்துவ அறிக்கை அல்லது அவர்களின் நோய் குறித்த தகவலை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வகை செய்யும் சட்ட விதிகள் எதுவும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் இல்லை என மாநில தேர்தல் ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ‘இந்த விவகாரம் தனிப்பட்டவரின் உரிமை (privacy) சம்பந்தப்பட்டது. இது புது விவகாரமாக இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். எனவே அவர்களின் கருத்தை கேட்க வேண்டும் என கூறினார்.

அப்போது நீதிபதி கிருபாகரன், சாதாரண அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு சேர்பவர்களுக்கு கூட உடல்தகுதி சான்றிதழ் கேட்கப்படுகிறது. ஆனால் நாட்டை ஆளப்போகும் நபர்களுக்கு உடல் தகுதி சான்றிதழ் கேட்கக்கூடாதா? பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர், உடல் தகுதி சான்றிதழ் கேட்பது எப்படி தனிப்பட்ட விவகாரமாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

பின்னர், இந்த வழக்கு தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறிய நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close