போதைப் பொருள் பயன்பாடு தமிழகத்தில் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதுவும் போதைப் பொருட்களை விற்கும் பெரும்பாலான கும்பல், படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து இயங்கி வருகிறது. படிக்கும் இளைஞர்கள் மத்தியில் உருவாகும் போதைப் பொருள் பழக்கம் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதனால், போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் அழிக்க, தமிழக காவல்துறை பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இப்போது, திருவள்ளூரில், கஞ்சா விற்பனை குறித்து சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு, மாவட்ட காவல்துறை சிறப்பு சலுகை ஒன்றை அளித்துள்ளது.
திருவள்ளூர் காவல்துறையினருக்கு அச்சுறுத்தலைக் களைய உதவுபவர்கள், மாவட்ட எஸ்பி வருண்குமார் உடன் டீ குடிக்கலாம் என்ற அறிவிப்புத் தான் அது.
தங்கள் பகுதியில் அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என எஸ்பி முன்னதாக அறிவித்திருந்தார்.
6379904848 என்ற பிரத்யேக எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது, மேலும் தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
சராசரியாக, ஹெல்ப்லைன் எண்ணுக்கு தினமும் 12 முதல் 15 அழைப்புகள் வருகின்றன. "அவர்கள் என்னை அணுகும் போதெல்லாம், நான் பொறுமையாக கேட்க நான் முயற்சி செய்கிறேன். மக்கள் என்னை அணுகும்போது அவர்களுக்கு வசதியாக இருக்க இந்த யோசனையை நான் கற்பனை செய்தேன்" என்று எஸ்பி வருண் குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
"கஞ்சா விநியோகம் மற்றும் விற்பனையை முடிவுக்குக் கொண்டுவருவதே மாவட்டத்தின் முதன்மையான முன்னுரிமை என்பதால், அவர்கள் என்னுடன் நெருக்கமாகப் பழகலாம் மற்றும் விவரங்களை அதிக நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளலாம்," என்று அவர் கூறினார்.
கஞ்சா விற்பனையாளர்களை தடுக்க மாவட்ட காவல்துறை மேலும் 15 சோதனைச் சாவடிகளைச் சேர்த்துள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், 1.13 கோடி மதிப்புள்ள 138 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 33 குற்றவாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“