தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'இந்தி பேசுபவர்கள் பானி பூரி விற்பதாக, வெள்ளிக்கிழமை கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டனர். முன்னாள் இஸ்ரோ தலைவர் க.சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில், மாணவர்களிடையே பேசிய அமைச்சர் பொன்முடி: உயர்கல்வியில் 53% மாணவர் சேர்க்கையுடன் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இது தான் திராவிட மாடல். இஸ்ரோ சிவன் மற்றும் நானுமே தமிழ் வழியில் தான் படித்தோம். தமிழ் மொழியில் படித்து தான் இந்திய அளவில் சிவன் உயர்ந்துள்ளார், நான் முனைவர் பட்டம் வரை பெற்று இன்று அமைச்சராக உள்ளேன்.
தமிழகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது.
இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். நீங்கள் நம் மாநிலத்திலும், கோவையிலும் சென்று பாருங்கள். பானி பூரிகளை விற்பர்கள் யார்? இந்தி பேசுபவர்களாக தான் இருக்கிறார்கள்.
நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். ஆங்கிலம் சர்வதேச மொழி, தமிழ் உள்ளூர் மொழி. உலகத்தோடு உரையாட ஆங்கிலமும், எங்களுக்குள் உரையாட தமிழும் போதும் என்கிற போது இந்தி எதற்கு.
யாரெல்லாம் இந்தி படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்தி படிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தி விருப்ப மொழியாக இருக்கலாம். ஆனால் கட்டாய மொழியாக இருக்கக்கூடாது.
புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என தனி கல்வி கொள்கையும் மொழி கொள்கையும் இருக்க வேண்டும். அதற்காக தான் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை வகுக்க முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார். இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை; மொழி திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படும். அந்தந்த மாநில மொழிகளுக்கே முக்கியத்துவம் தந்து கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையால் பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழை கற்பிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள பிற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஆண்டு குடியரசு தின உரையில், ஆளுநர் புதிய கல்விக் கொள்கைக்கு தனது ஆதரவை அளித்து, தமிழ்நாட்டு மாணவர்கள் பிற இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே அமைச்சர் பொன்முடி கருத்துக்கு பதிலளித்த பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின் அர்த்தமற்ற, பயனற்ற, நடத்தையற்ற கருத்து, அவரது தரத்தையும், தமிழக அரசாங்கத்தையும் குறைத்துக்கொண்டது.
இந்தி பேசும் மக்களை, பானி பூரி விற்பவர்கள் என இழிவுபடுத்தி, நாட்டைச் சிதைக்க முயன்றதால், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அமைச்சரவையில் இருந்து விலகும்படி அவருக்கு அறிவுறுத்துவார் என நம்புகிறேன். அவரது கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டின் ஒருமைப்பாட்டுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில், பொன்முடியை பதவி விலகக் கோருவார் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.