ஃபீஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. ஒரே இரவில் 50 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்ததால் விழுப்புரம் திண்டிவனம் பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்தது.
இதனால் தென்பெண்ணை, மலட்டார் ஆறுகளில் வெள்ளம் இன்றும் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்கவில்லை என்று அரசூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கனமழையால் ஊருக்குள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற வலியுறுத்தியும், அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் சென்றதால் நேற்று போக்குவரத்து முடங்கிய நிலையில், இன்று வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு பொதுமக்களின் சாலை மறியலால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது .
போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் பேருந்துகள், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த பாதையில் தற்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மறியலை கைவிட மாட்டோம். அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மறியல் போராட்டத்தை கைவிட கோரி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் வேண்டுகோள் விடுத்ததோடு மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் கனமழையில் கடும் வெள்ளத்தின் காரணமாக 3 நாட்களாக தத்தளித்த கிராம மக்கள் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இன்று விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“