scorecardresearch

இனி அரசியல் வேண்டாம்; நற்பணி மட்டும் போதும்’ பெரம்பலூர் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிரடி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தில் தோல்விக்கு பிறகு, பெரம்பலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் 9 பேர், இனி அரசியல் வேண்டாம் நற்பணி மட்டும் போதும் என்று முடிவெடுத்து கட்சியை விட்டு விலகுவதாக கடிதம் எழுதியுள்ளனர்.

இனி அரசியல் வேண்டாம்; நற்பணி மட்டும் போதும்’ பெரம்பலூர் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிரடி

பெரம்பலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் மநீம கட்சியின் மாவட்ட செயலாளர் உட்பட 9 பேர் அக்கட்சியை விட்டு விலகுவதாக கட்சி தலைமைக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எம்.என். செந்தில்குமார், துணை செயலாளர் சி.ராஜ்குமார் உள்பட 9 நிர்வாகிகள் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கடிதத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கிய நாள் முதல் திறம்பட செயல்பட்டோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வியடைந்தோம். இது எங்களை கவலையடையச் செய்கிறது. எனவே, மநீம கட்சியில் இருந்தும் கட்சியின் கட்டமைப்பு மட்டங்களில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் விடுபடுகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் ஊடகங்களிடம் கூறுகையில், “நாங்கள் அனைவரும் கமல் நற்பணி மன்றத்தில் இருந்தோம், மநீம-வில் இணைந்தோம். தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை அறிவுறுத்துகிறது. ஆனால், கட்சித் தலைவர் பிரச்சாரத்திற்கு வருவதில்லை. நாங்கள் கட்சியில் இருக்க விரும்பவில்லை. ஏனென்றால், நாங்கள் மட்டுமே போராடி வருகிறோம். தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்கிறோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியாக செயல்படாமல், நற்பணி மன்றமாகவே செயல்படுகிறது. சட்டசபை தேர்தலுக்குபின், அக்கட்சியின் புதிய நிர்வாகிகள், எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இந்தமுறை பெரம்பலூர் நகராட்சியில், 6 வார்டுகளில் போட்டியிட்டு, தோல்வியடைந்தோம். கட்சியில் எந்த எழுச்சியும் இல்லாததால் தேர்தலில் யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.

கட்சியிலும் எந்த வளர்ச்சியும் இல்லை. கட்சியின் உறுப்பினர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். கட்சி நம்பிக்கை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

கட்சித் தலைவர் சென்னையில் மட்டும் பிரச்சாரம் செய்தார். அங்கேயாவது கட்சி வெற்றி பெற்றிருந்தால் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும். தலைவர் மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை, கட்சியை விட்டு வெளியேறுகிறோம். ஆனால், வழக்கம் போல் நற்பணி மன்றத்தை தொடர்வோம்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Perambalaur mnm party 9 functionaries letter to resign from party but continues fans club

Best of Express