scorecardresearch

‘ஒரு துறையோடு நிற்க கூடாது’ : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க எம்.எல்.ஏ மறைமுக கோரிக்கை

அமைச்சர் உதயநிதி அனைத்து துறைகளிலும் முதலமைச்சருக்கு துணை நின்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ பிரபாகரன் தெரிவித்தார்.

Udhayanidhi
உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஓரிரு துறையுடன் நின்று விடாமல் அனைத்து துறைகளிலும் முதலமைச்சருக்கு துணை நின்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மறைமுகமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தரக்கோரி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று (ஏப்ரல் 17) மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தனது தொகுதி கோரிக்கைகளை முன்வைத்தார்.

நம்பர் 1 முதலமைச்சர்

அப்போது பேசிய அவர், “பெரம்பலூர் நகர், வி.களத்தூர், அகரம் சீகூரில் தனிக் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு தனி கோட்டாட்சியர்களை நியமிக்க வேண்டும்” எனப் பேசினார். தொடர்ந்து, இன்று பலரும் வாழ்த்தும் வண்ணமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்று பலரும் பாராட்டத்தக்க வகையில் செயலாற்றி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் பாணியில் நின்று விளையாடி ஃபோர் (4), சிக்ஸர் (6) என கலக்குகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களிடம் அவரது கனிவான அணுகுமுறை, செயலாற்றும் பாங்கு ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது.

தி.மு.க எம்.எல்.ஏ பிரபாகரன்

அதையும் தாண்டி நமது நம்பர் 1 முதலமைச்சரின் தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் அவரது உழைப்பு, சீரிய சிந்தனை, மகளிர் உயர்வு குறித்த தொலைநோக்கு திட்டம் ஆகியவை குறித்த பணிகளை முதலமைச்சரின் துணை நின்று மேற்கொள்ள வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் மகனும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க எம்.எல்.ஏ மறைமுக கோரிக்கை விடுத்துள்ளது தி.மு.கவில் பேசு பொருளாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Perambalur dmk mla speech about udhayanithi stalin