பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8மாத நிலுவை ஊதியம் வழங்க கோரி தொடரும் உள்ளிருப்பு போராட்டம் எதிரொலியாக ஊதிய பதிவு பட்டியல் திறக்காததால் கவுரவ விரிவுரையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மூலம் ஊதியம் பெறும் கவுரவ விரிவுரையாளர்கள், மணி நேர விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என 40 பேருக்கு 8 மாதம் சம்பளம் நிலுவையில் உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலுவை மாத ஊதியத்தை வழங்க கோரியும், விடுபட்டப் பாடப்பிரிவுகளுக்கு அரசாணை ஒப்புதல் வழங்க வேண்டியும் வகுப்பு மற்றும் அலுவலக பணிகளை புறக்கணித்து, கடந்த மாதம் 22-ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 8) கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மணி நேர விரிவுரையாளர்களுக்கு மட்டும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஊதிய பதிவுப் பட்டியல் விபரங்கள் கேட்டு திறந்துள்ளது. 8 மாத நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான ஊதிய பதிவு பட்டியல் திறக்கப்படாததால் ஊதியப் பதிவுப் பட்டியல் நிரப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் ஊதிய பதிவு பட்டியல் திறக்கும் வரை கவுரவ விரிவுரையாளர்கள், மணி நேர விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வினோத், சந்திரமவுலி தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும், வழக்குரைஞருமான எம்.சரவணன் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது; பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி-கௌரவ விரிவுரையாளர்கள் மணி நேர விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சுமார் 40 நபர்களுக்கு கடந்த நவம்பர் 2023 முதல் ஜூலை 2024 வரை சுமார் 8 மாதம் ஊதிய வழங்காமல் அரசு இருந்து வருகிறது, அவர்களது ஜீவாதார பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆனது தமிழக அரசால் கடந்த 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. அரசு கலைக் கல்லூரி ஆகும் வரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. அதன் பிறகும் பல்கலைக்கழக மூலம் ஊதிய வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அரசுதான் ஊதியம் வழங்கும் எனக் காரணம் காட்டி பாரதிதாசன் பல்கலை கழகம் ஊதியம் வழங்குவதை நிறுத்திவிட்டது. ஆனால், அரசும் இந்த 40 நபர்களுக்கு ஊதியம் வழங்காமல் சுமார் 8 மாத காலமாக இருந்து வருகிறது. இதனால் இவர்களுடைய குடும்பம் பசியிலும், பட்டினியிலும், துன்பத்திலும் வாடிவருகின்றனர்.
எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட 40 நபர்களுக்கு ஊதியம் வழங்கி அவரது பணியினை நிரந்தரம் செய்து, அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இது 40 நபர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. 40 குடும்பம் சம்பந்தப்பட்ட வாழ்வாதார பிரச்சனை. காரணம் இதில் பணியாற்றிய அனைவரும் தங்களின் வாழ்நாளின் பாதி ஆண்டை இந்த கல்லூரியிலேயே கடந்து விட்டனர். எனவே, இனி இவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. எனவே, கருணை உள்ளத்தோடு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.