க.சண்முகவடிவேல்
Perambalur | Lok Sabha Election 2024: பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி நீண்டகாலமாக தனித் தொகுதியாக இருந்தது. இந்த நிலையில், 2009-ம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. கி.பி 10-ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட வாலீஸ்வரர் கோயில், ஆங்கிலேயர் படைக்கும் பிரெஞ்சு படைக்கும் இடையே வாலிகண்டா போர் நடைபெற்ற ரஞ்சன்குடிகோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களும், வரலாற்று பிரசித்திபெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளத்தில் குன்றில் மேல் அமைந்துள்ள வடபழனி முருகன் கோயில் இத்தொகுதிக்கு புகழ் சேர்த்து வருகின்றது.
பெருமளவு கிராமப்புறங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் விவசாயம் மட்டுமே பிராதனமான தொழிலாக உள்ளது. சின்ன வெங்காயம், மக்காச்சோளம் உற்பத்தியில் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது இந்தத் தொகுதி தான். வாழை, கரும்பு, பருத்தி, நெல் ஆகிய பயிர்களும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயப் பொருட்களின் விலை நிரந்தரமானதாக இல்லை என்பதால் கடுமையான பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதனால், விவசாயத் தொழிலை விட்டு வேலை தேடி பெரு நகரங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் இடம்பெயர்வதும் இத்தொகுதியில் அதிகம்.
1951-ல் உருவாக்கப்பட்ட பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி இதுவரை 17 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டவுடன், அதில் இடம் பெற்றிருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் பலவும் வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டன.
பெரம்பலூரைத் தவிர திருச்சி மாவட்டத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. இது தனித் தொகுதியாக இருந்தபோது, தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சராகவும், சென்னையில் வசித்த நெப்போலியன் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய இணை அமைச்சராகவும் வலம் வந்த தொகுதி. இன்றும் பெரம்பலூர் என்றால் ராஜா என்ற நிலை தொடர்கின்றது.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்; பெரம்பலூர் (தனி), துறையூர் (தனி), லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகியனவாகும்.பெரம்பலூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,39,315 ஆகும். இதில், ஆண் வாக்காளர்கள் 6,97,984-ம், பெண் வாக்காளர்கள் 7,41,200-ம், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 131-ம் அடங்குவர்.
தி.மு.க., அருண் நேரு - பா.ஜ.க டி.ஆர்.பாரிவேந்தர் - அ.தி.மு.க., சந்திரமோகன் - நா.த.க தேன்மொழி
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க 7 முறையும், அ.தி.மு.க 6 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடியுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த எஸ்.ஆர்.எம்.பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற நிலையில், தற்போது பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து தாமரை சின்னத்தில் களமிறங்கியிருக்கின்றார். இவரை ஆதரித்து பிரதமர் மோடியே பிரசாரம் செய்யவிருக்கும் நிலையில், மத்திய பா.ஜ.க தலைவர்களின் பிரசார பலம், மோடி பலம், க்டந்த தேர்தலில் தனது சொந்த செலவில் அப்பகுதியை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி செய்வேன் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றிய பலத்துடனும், விட்டமின் "ப" பலத்துடனும் களமிறங்கியிருக்கி பிரச்சார களத்தில் முந்திக்கொண்டிருக்கின்றார்.
தி.மு.க சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு இளைஞர் என்ற பலம், கூட்டணி கட்சிகளின் பலம், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், வைகோ போன்றவர்களின் பிரச்சார பலத்தை நம்பியும், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவேன் எனச்சொல்லி களத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றார்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான தொகுதிகள் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருவதால் திருச்சி, பெரம்பலூர் தி.மு.க கோட்டை என்ற பெரிய பலத்துடன் களத்தில் பண பலத்துடனும், மோடி பலத்துடனும் இருக்கும் பா.ஜ.க வேட்பாளர் பாரிவேந்தருடன் கடுமையாக டப் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்.
பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக என்.டி.சந்திரமோகன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கான்ட்ராக்டரான இவர், தற்போது அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற பெரம்பலூர் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். சந்திரமோகன் தொகுதியில் பெரிதாக அறிமுகம் இல்லாதவர். கட்சியினர் பலருக்கே இவரை அதிகம் தெரியவில்லை. இவருடைய அரசியல் பின்னணி என்று பார்த்தால், ஒருகாலத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும், திருச்சியில் நின்று வென்ற ஒரே தி.மு.க எம்.பி- என்ற வரலாற்று பெருமையுடன் திகழும் மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜின் தம்பி துரைராஜின் மகன் தான் இந்த சந்திரமோகன்.
இதைத்தவிர, வேறெந்த பின்புலமும் பெரிதாக இல்லை. கடந்த 2016 -ம் ஆண்டுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். அதன்பிறகு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பதவியை வாங்கிகொண்டு, கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்து செய்து வரும் சந்திரமோகன் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன், களத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார்.
பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளர் பேராசிரியர் தேன்மொழியை பொறுத்தவரை ஒற்றைத் தலைமை சீமான் பலத்துடனும், மாற்றத்தை விரும்பும் மக்களின் பலத்துடனும் களத்தில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். பெரம்பலூர் தொகுதியில் 4 முனை போட்டி என்றாலும், பா.ஜ.க-வுக்கும் - தி.மு.க-வுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றது. ஆளும் கட்சி பலத்தில் உதயசூரியன் கொஞ்சம் பிரகாசமாகத்தான் தெரிகின்றது எனலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு பொறியியல், வேளாண்மை கல்லூரிகளும் அமைக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்க கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை. விவசாய பாசனத்துக்காக முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பெரம்பலூரில் சின்ன வெங்காயம், மக்காச்சோளத்துக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். குளித்தலையில் வாழை ஆராய்ச்சி நிலையமும், முசிறியில் வாழைக்காய் பதப்படுத்தக்கூடிய சேமிப்பு கிடங்குகளையும் அமைக்க வேண்டும். லால்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களை நின்று செல்வதற்கு அரசியல் கட்சிகள் முயற்சி செய்யவேண்டும், பெரம்பலூர்- அரியலூர், பெரம்பலூர்-துறையூர் வழியாக நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் ரயில்பாதை அமைக்கப்படவேண்டும் என்ற நீண்ட கால வேண்டுகோள்கள் தீர்க்கப்படவேண்டும் என்பதே பெரம்பலூர் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.