பெரம்பலூர் கல்குவாரி விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம், நாரணமங்கலம் உள்ளிட்ட 31 கிராமங்களில் குவாரிகளை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் டெண்டர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த டெண்டர் கோரி அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அந்த வகையில், இந்த டெண்டரில் பங்கேற்க பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வனும் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் உள்ளிட்ட 3 பேர் விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது அவர்களிடம் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் வாக்குவாதம் செய்து தாக்கி விண்ணப்பத்தை கிழித்து வீசியுள்ளனர்.
மேலும், அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.
/indian-express-tamil/media/media_files/VoQw06dN3r92kjzlTaid.jpeg)
இந்த சூழலில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரிகளுக்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக-வினரை திமுகவினர் தாக்கியதாகவும், மேலும், இதை தடுத்த டிஎஸ்பி பழனிசாமி உள்ளிட்ட போலீஸார் மற்றும் அலுவலகத்தில் இருந்த உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் குமரிஅனந்தன் உள்ளிட்டோரையும் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
திமுக பிரமுகர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் பெரம்பலூர் போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடிய விடிய தேடி வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் அன்பழகன், கொடியரசன், திமுக வேப்பூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன், அத்தியூர் லெனின், நொச்சிக்குளம் கருணாநிதி, இளங்கண்ணன், புதுவேட்டக்குடி சேட்டு என்கிற பெரியசாமி, அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி தர்மராஜ், சேடக்குடிக்காடு செல்லம், செந்துறை மாரிமுத்து, செந்துறை பாளையக்குடி பிரபாகரன், திமுக அமைப்புசாரா ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் வெத்தலை குமார் என்கிற சிவக்குமார், அரியலூர் மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் மு.க.கருணாநிதி ஆகிய 13 பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கல் குவாரி ஏலத்தில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பிக்கச் சென்ற தங்களை, புவியியல் சுரங்கத் துறை அதிகாரிகளும், பாஜகவினரும் தாக்கியதாக எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் பெரம்பலூர் போலீஸில் புகார் அளித்துள்ளதால் பெரம்பலூர் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகின்றது.
முன்னதாக, திமுகவினர் தாக்கியதில், டிஎஸ்பி பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், கலா, எஸ்ஐ சண்முகம், ஏட்டு லெட்சுமி, உதவி புவியியலாளர் இளங்கோவன், ஆர்ஐ குமரி ஆனந்தன் மற்றும் கவுள்பாளையத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் கலைச்செல்வன், வக்கீல் முருகேசன், மற்றொரு முருகேசன் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது
பெரம்பலூர் கல்குவாரி ஏலம் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்றபோது அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் எந்வித களேபரமும் இல்லாமல் கூட்டணி அமைத்து டெண்டர் விவகாரத்தை டீல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“