Advertisment

அதிகரிக்கும் பயணிகள்: பெரம்பூரில் 4வது ரயில் முனையம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் பதில்

பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு நான்காவதாக பெரம்பூரில் புதிதாக ஒரு ரயில் முனையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
ashwini vaishnav

Ashwini Vaishnav

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை, அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு, சென்னையில் ரயில் சேவையை மேம்படுத்த ரயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சென்னையில் நான்காவது ரயில் முனையம் அமைக்கவும் திட்டமிருக்கிறதா? என கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ’இந்திய ரயில்வே துறையைப் பொறுத்தவரை சென்னை மிக முக்கியமான ஒரு மாநகரம். சென்னையை மையமாக வைத்து தொடர்ச்சியாக பல திட்டங்களை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய மூன்று ரயில் முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரயில்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு நான்காவதாக பெரம்பூரில் புதிதாக ஒரு ரயில் முனையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆய்வு நடந்து வருகிறது. 

2009-14 ல் தமிழகத்துக்கு 879 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2024-25-ல் 6362 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

பலமடங்கு நிதி ஒதுக்கீடு அதிகமாகியும் பல ரயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள்தான் காரணம். தமிழகத்தில் பல முக்கியமான திட்டங்களுக்கு 27,749 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட 77 ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இதன்படி இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். காத்திருப்பு அறைகள், தொழில் சார்ந்த கூட்ட அரங்குகள், இலவச வைஃபை வசதி, சில்லறை விற்பனைக் கடைகள், ரயில் நிலையங்களின் மேற்பகுதியில் வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளூர் மக்களின் ரசனை மற்றும் பண்பாடு சார்ந்து அமைக்கப்படும்.

சாலைகளில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பு மற்றும் எளிதான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த பத்தாண்டுகளில் 687 ரயில்வே லெவல் கிராசிங்குகளில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் மேலும் 239 இடங்களில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பயணிகளின் எண்ணிக்கை, ரயில் நிலையங்களில் ரயில்கள் மற்றும் பயணிகளை கையாளும் இட வசதி ஆகியவற்றைப் பொறுத்து புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள 12 நடைமேடைகள் மூலம் தினசரி 158 ரயில்களும், எழும்ப்புரில் 11 நடைமேஎடைகள் மூலம் 108 ரயில்களும், தாம்பரத்தில் 9 நடைமேடைகள் மூலம் 93 ரயில்களும் இயக்கப்படுகின்றன,’ என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment