எழுவர் விடுதலைக்காக 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம்! – அற்புதம்மாள் அறிவிப்பு

என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை

By: Updated: February 20, 2019, 01:25:51 PM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது.

இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. உடனடியாக, தமிழக அமைச்சரவைக் கூடி, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தது. தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

7 பேர் விடுதலை முடிவில் ஆளுநர் மாளிகையின் தாமதத்தைக் கண்டித்து வேலூர் சிறையில் உள்ள நளினி, முருகன் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உச்சநீதிமன்றமே, ஏழு பேரையும் விடுதலை செய்வதில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என தெரிவித்துவிட்டது. ஆக, சட்டரீதியாக இனி எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், ஆளுநர் இன்னும் ஏழு பேரையும் விடுதலை செய்வதில் காலம் தாழ்த்தி வருகிறார். என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. எனக்கு 71 வயதாகிவிட்டது. வேகமாக நடமாட முடியவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை நான் விடுவதாக இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, மதுரை ஆகிய 7 நகரங்களில் வரும் மார்ச் 9ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அற்புதம்மாள் இன்று சந்தித்துள்ளார். ஏழு பேரின் விடுதலை தொடர்பாக அவர் முதல்வரை சந்தித்ததாக தெரிகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Perarivalan mother arputhammal announced human chain protest

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X