Advertisment

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வரலாற்றில் இடம் பெறும்: ஸ்டாலின்- தலைவர்கள் வரவேற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனு விடுதலை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து நீண்ட சட்டப் போராட்டம் நடத்திய அற்புதம்மாள், பேரறிவாளன் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisment

பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும்.

ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு எதையும் வெல்லும் திறன் உண்டு எனத் தாய்மையின் இலக்கணமாக நின்றுள்ளார் அற்புதம் அம்மாள் என்னும் அயராத போராளி!

பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு என்பது மனிதவுரிமை அடிப்படையில் மட்டுமல்லாமல், மாநில உரிமை சார்ந்தும் வரலாற்றில் இடம்பெறத்தக்கது!

மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பைப் பெற்று இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியியலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசில் தமிழ்நாடு நிலைநாட்டியுள்ளது!” என்று பேரறிவாளனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான நாள் குறித்து அறிவிப்பு வெளியானதைக் கேட்டு அதிர்ந்து போனேன். இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானியை தொடர்பு கொண்டு, சென்னைக்கு அழைத்து வந்து, உயர் நீதிமன்றத்தில் வாதாடச் செய்து, தண்டனையை நிறுத்தி வைத்துத் தடை ஆணை பெற்றோம்.

அதற்குப் பின்னர், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டின் அனைத்து அமர்வுகளிலும், ராம் ஜெத்மலானி கலந்துகொண்டு அருமையான வாதங்களை எடுத்து வைத்தார். இந்த வழக்கில், அவருடைய வாதங்கள் முதன்மையானவை. அத்தனை அமர்வுகளிலும், அவருடன் நான் பங்கேற்றேன்.

அதன்பிறகு, தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கடந்தபோதிலும், முந்தைய ஆளுநரும், இன்றைய ஆளுநரும் அந்தக் கோப்பைக் கிடப்பில் போட்டு வைத்து இருந்தது மிகப் பெரிய அநீதி ஆகும்.

எந்தத் தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டுவிட்டது. 31 ஆண்டுகளாக, இந்த ஏழு பேரும் துன்ப இருளில் வாடி வதங்கி விட்டார்கள். இழந்ததை இனி மீண்டும் பெற முடியாது.

இப்போது, உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; எல்லையற்ற மகிழ்ச்சி. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அவர்கள் கொலைகாரர்கள், நிரபராதிகள் அல்ல என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இது குறித்து கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.

கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை ? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும் தொலைநோக்கு சிந்தனைக்கும் சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.

பேரறிவாளன் விடுதலை குறித்து ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித் தலைவி அம்மா அவர்களின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி; நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் துணிச்சல் மிகுந்த நிர்வாகம், அம்மா அரசின் நிர்வாகம் என்பது மீண்டும் நிரூபணம்!” என்று தெரிவித்துள்ளனர்.

பேரறிவாளன் விடுதலையில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இந்த வழக்கில் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதையும் கடந்து குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கில் ஒருவருக்கு முழுமையான நீதி வழங்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவை பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. பேரறிவாளனின் விடுதலைக்கு சிறையில் இருந்தபடியே அவர் நடத்தி வந்த நீண்ட நெடிய சட்டப் போராட்டம் தான் முதன்மைக் காரணம் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

பேரறிவாளளனின் இந்த விடுதலையே மிகவும் தாமதிக்கப்பட்ட ஒன்று தான். பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு விரும்பினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என்று கூறியிருந்தது. அதன்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய அப்போதைய அரசு முடிவு செய்த போது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்ததால் தான் பேரறிவாளனின் விடுதலை 8 ஆண்டுகள் தாமதமாகியிருக்கிறது.

அதன்பிறகும் கூட, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் 900 நாட்கள் கழிந்த நிலையில், அது குறித்து தம்மால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, 7 தமிழர் விடுதலை குறித்த கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டதாக ஆளுனர் மாளிகை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லாத நிலையில் அதை தாமதப்படுத்துவதற்காக நடந்த முயற்சி தான் இது என்பதில் ஐயமில்லை. ஆளுனர் மாளிகையின் இந்தப் போக்கு குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பேரறிவாளனின் விடுதலை எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கிறது. பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து அரசியல் அழுத்தங்களை கொடுத்து வந்தவன் என்ற முறையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நிம்மதியளிக்கிறது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அவர் இழந்த அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கால கட்டமான 31 ஆண்டுகளை எவராலும் திருப்பி அளிக்க முடியாது. இனி பேரறிவாளன் அவரது இயல்பு வாழ்க்கையையும், இல்லற வாழ்க்கையையும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் தொடங்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிவாளன் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனித உரிமை சார்ந்த கோணத்திலும் மிகவும் முக்கியமானதாகும். இந்தத் தீர்ப்பு ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், இராபர்ட் பயஸ் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர்களின் விடுதலைக்கான ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து தமிழக அரசே பெற முடியும்.

அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை முருகன், சாந்தன், ஜெயக்குமார், இராபர்ட் பயஸ் ஆகிய நால்வரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் மட்டுமின்றி 34 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் உள்ளிட்ட நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அனைவரையும் 161-ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றியஅரசு என்னசெய்யப் போகிறது?” என்று கேள்வி எழுப்பி பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழக பாஜக ஏற்கிறது என்று பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Thirumavalavan Ramadoss Vaiko A G Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment