தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த ஆன்லைன் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உரையாற்ற இருந்த நிலையில், எதிர்ப்புகள் காரணமாக நிகழ்ச்சியை தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் அரங்கில் டிசமபர் 17-ம் தேதி பேரறிவாளன் உரையாற்றுகிறார் என்று செய்திகள் வெளியானது. பின்னர், பேரறிவாளன் முதன்முறையாக மனந்திறந்து பேசுகிறார் என்பதால் இந்த நிகழ்ச்சி மீது எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில், ஏசிஜே-வில் உரையாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, பேரறிவாளன் ஆன்லைனில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. பேரறிவாளன் நாளை ஆன்லைன் வழியாக உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய சட்டப் பல்கலைக்கழகம் பேரறிவாளன் உரை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு சமூக செயல்பாட்டாளர்கள், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பத்திரிகையாளர், எழுத்தாளர் கவின் மலர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் அரங்கில் டிசமபர் 17 அன்று பேரறிவாளன் முதன்முறையாக மனந்திறந்து உரையாற்றப் போகிறார் என்கிற செய்தியறிந்து அகமகிழ்ந்தேன்.
சுமந்த் ராமன்கள், அமெரிக்கை நாராயணன்கள் போல இரண்டு மூன்று பேர் எதிர்ப்பு தெரிவித்து ட்விட் செய்தனர். உடனே நிகழ்வு இணையக் கூட்டமாக நடக்கும் என்கிற அறிவிப்பு வந்தது. நிகழ்விடத்தில் வன்முறை நடக்குமென மிரட்டல்கள் வந்ததாக அறிக்கை தெரிவித்தது. அப்படியெனில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டாமா?
சரி போகட்டும் என்று பார்த்தால் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் இப்போது நிகழ்ச்சியையே ரத்து செய்திருக்கிறது.
யார் மிரட்டியிருந்தாலும் காவல்துறையில் புகார் அளித்து விட்டு இணையத்தில் கூட்டத்தை நடத்தி இருக்கலாம். ஆனால் இப்படி தனிநபரின் கருத்துரிமைக்கு எதிராகச் செயல்படுவோரின் குரலுக்கு செவிமடுப்பது ஜனநாயக விரோதச் செயல்.
எக்காரணம் கொண்டும் இந்நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கக் கூடாது. அப்படிச் செய்வது கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இழப்பு பேரறிவாளனுக்கு அல்ல. அவர் தரப்பைக் கேட்க முடியாத இச்சமூகத்திற்குத்தான்.
என் செவிகளை ஒரு சிலருக்கு மட்டுமே திறப்பேன் எனச் சொல்லி ஒருவரை பேசவிடாமல் தடுப்பது அரசியல் அமைப்புச் சட்டம் தந்த பேச்சுரிமைக்கு எதிரானது. உங்களுக்கு மாறுபாடுள்ள கருத்தை ஒருவர் சொன்னாலும் அதைக் கேட்டு எதிர்க்கருத்தைச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு ஒடுக்குவதும் அடக்குவதும் அநீதி.
அறிவுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் மற்றுமொன்றாக இதுவும் சேர்ந்துகொள்கிறது. வன்மையான கண்டனங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“