scorecardresearch

மொய் விருந்து, எடைக்கு எடை பணம்; தி.மு.க- தி.க கூட்டுக் கொள்ளைகள்: அண்ணாமலை சாடல்

வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது- அண்ணாமலை

மொய் விருந்து, எடைக்கு எடை பணம்; தி.மு.க- தி.க கூட்டுக் கொள்ளைகள்: அண்ணாமலை சாடல்
DMK MLA Ashok kumar Moi virunthu

பேராவூரணி தொகுதியின் திமுக எம்எல்ஏ அசோக் குமார், தனது பேரக்குழந்தைகளின் காதணி விழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி, பிரம்மாண்ட மொய் விருந்து நடத்தினார். விருந்தில் பங்கேற்றவர்கள் 1,000 ரூபாய் முதல் 5 லட்சம் வரை மொய் எழுதிச் சென்றனர். இதற்காக பணம் எண்ணும் இயந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் வசூலாகி இருந்தது.

இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர், மொய் விருந்து போட்டு 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, மக்களையும் அரசையும் முட்டாளாக்க நினைக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திமுக எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தில், 11 கோடி ரூபாய்க்கும் மேலே வசூல் ஆகியுள்ளது, வாழ்வதற்கு வழியில்லாமல், பண முடையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது. அதைத் தன் சுய இலாபத்திற்காக, 100 ஆடுகள் மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிக்கன் ரோஸ்ட் என தடபுடலாக 8,000 பேருக்கும் மேலே விருந்து தூள் கிளப்ப, அசைவச் சாப்பாடும், சைவச்சாப்பாடும் பரிமாறியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. அசோக் குமார்.

இந்த விருந்தின் சுவையான பகுதியே,… மொய்க்கான ஏற்பாடுகளே…. சுமார் 40 மொய்வாங்கும் கவுண்டர்கள், கட்டுக்கட்டாக வரும் பணத்தை, கவனமாக எண்ணிப் பார்க்க, பணம் எண்ணும் இயந்திரம், அதை உடனடியாக வங்கிக் கணக்கில் சேர்க்க, வங்கி அதிகாரிகள், என்று குட்டி ரிசர்வ் வங்கி போல மொய் வசூல் மையம் நடத்தப்பட்டுள்ளது….வியப்பளிக்கிறதா…! இல்லையா?

மொய் விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும் ரூ.1,000 -ல் தொடங்கி ரூ.5 லட்சம் வரை அவரவர் வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர்…. இது சத்தியமா…சாத்தியமா…. அங்கே தான் நிக்கிறது திமுகவின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை. 2 இலட்சத்திற்கு மேல் காசோலைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அதிக கரன்சிக்களை வைப்பது குற்றம். வங்கியில் ரூ.50,000/க்கும் மேல் செலுத்த வருமானவரித்துறை கேள்வி கேட்கும். குவிந்திருக்கும் கருப்புப் பணம் வெள்ளையாக வேண்டும்….. என்று சாமானிய மக்களுக்கு சொல்லுது சட்டம்…. ஆனா… அசோக் குமார் அடிச்சது, ஒரே கல்லில் அஞ்சாறு மாங்காய்.

சாப்பிட்ட ஊருக்காரனும் ஹாப்பியில், சாப்பிடா முடியாத கருப்புப் பணமும் ஜோப்பியில், இந்த விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமயையே விஞ்சும், கைதேர்ந்த திறமைசாலிகள் திமுகவினர். இப்படித்தான் சமீபத்தில் தி.க தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை, மக்கள் வழங்கும் கரன்சிக்கள் துலாபாரத்தில் வைக்கப்பட்டது. கரன்சிக்கு எதிர் முனையில் தலைவர் அமர்ந்த தராசை ஒருவர் முட்டிக்காலால் முட்டுக் கொடுத்தது…., சமூக ஊடகத்தில் வைரல் ஆனது.

அதே படக்காட்சியை மறுபடி பாருங்கள். வலது ஓரத்தில் ஒரு வெள்ளைநிற பிளாஸ்டிக் பையிலிருந்து ஒரு நபர் மேடைக்கு வரும் மக்களிடம், பணக் கட்டுக்களைத் தருவார். தனக்கும் அந்த ரூபாய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற முகபாவத்தில், பரிதாபமாகப் பலர் வந்து, பல இலட்சங்களை தராசில் கிடத்திச் செல்லும் நகைச்சுவைக் காட்சியும் நடைபெற்றது. என் காசைத்தானே தருகிறார்கள் என்ற தோரணையில், பணத்தை அடுக்குபவர்களின் முகம் கூட நோக்காது, நன்றிப் பரிமாற்றம் கூட இல்லாமல் தராசில் அந்தத் தலைவர் அமர்ந்திருக்க …. அங்கே தராசால், கருப்புகள்…. வெளுக்கப்பட்டது

மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் இவர்களின் கூட்டுக் கொள்ளைகள், இப்போதுதான் வெளிச்சப்படுகிறது. மக்களுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. உண்மையான ஊழலற்ற தமிழகத்திற்கான விடியல் ஆட்சி, எப்போது வரும் என ஏக்கத்துடன், விருந்துகளையும், துலாபாரத்தையும், மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு அண்ணாமலை தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Peravurani mla ashok kumar moi virunthu k annamalai criticize