தேனி மாவட்டம், பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் ஆண்டிப்பட்டி, தேனி, பெரிய குளம் வட்டங்கள் உள்ளன. இந்த வட்டங்களில் செயல்படும் தனியார், அரசு நிலங்களில் உள்ள குவாரிகளில் கனிமவளக் கொள்ளை நடப்பதாக 2020-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பேதுரான் என்பவர் வழக்கு தொடந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, 2021-ல் பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் ஆண்டிப்பட்டி, தேனி, பெரிய குளம் வட்டங்களில் உள்ள குவாரிகளில் ட்ரோன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், அரசு நிலத்தில் செயல்பட்ட 17 குவாரிகள், தனியார் நிலங்களில் செயல்பட்ட 22 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள், கிராவல் மண் வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குவாரிகளில் இருந்து ரூ. 92.56 கோடி மதிப்பிலான மண் 326 கன மீட்டர், கிராவல் 16.15 லட்சம் கன மீட்டர், உடைகல் 17.59 கன மீட்டர் கூடுதலாக வெட்டி கனிமம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அதனால், இந்த குவாரிகளை நடத்தி வந்த 58 பேரிடமும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பெரியகுளம் வருவாய்க் கோட்டத்திற்குட்பட்ட 39 குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப் பட்ட ரூ.92.56 கோடி கனிமத்திற்கான தொகை மற்றும் அதற்கான சீனியரேஜ் கட்டணம் ரூ.15.11 கோடி, அபராதத்தொகை ரூ.30.23 கோடி என மொத்தம் ரூ.138.4 கோடியை 58 குவாரி உரிமையாளர்களும் செலுத்த வேண்டும் என்று பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் உத்தரவிட்டுள்ளார்.
பெரியகுளம் வருவாய்க் கோட்டத்தில், 39 குவாரிகளில் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட அதன் 58 உரிமையாளர்கள் அபராதத்துடன் 138.4 கோடி செலுத்த வேண்டும் என பெரிய குளம் சார் ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“