சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள ஈ.வே.ரா பெரியார் சாலை எந்த முன்னறிவிப்பும் இன்றி கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டதற்கு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே, பெரியார் சிலைகலை பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் அவமதித்துவரும் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், பெரியார் பெயரில் அமைந்த சாலையின் பெயர் மாற்றப்பட்டது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள சாலைக்கு பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்று பெயரிடப்பட்டது.
இந்த நிலையில், பெரியார் ஈ.வே.ரா சாலையை இன்று கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டதாக புதிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பெரியார் பெயரில் அமைந்த சாலையின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில், பெரியார் ஈ.வே.ரா சாலை பெயர் மாற்றம் நடந்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி, திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெரியார் ஈ.வே.ரா சாலை பெயர் மாற்றப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்ட போதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தமிழகத்தில் அதிமுகவின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்ஜிஆர் சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது, தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?
எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க.” என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக – தொடர் விழாவாக நடத்திய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.தி.மு.க. அரசு 1979 இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை” என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார்.
அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு – நெடுஞ்சாலைத் துறை இணைந்து கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி – விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடனடியாக அதை இணைய தளத்தில் இருந்து நீக்கி, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!!” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் உள்ள பெரியார் ஈ.வே.ரா சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பெயரை கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டது. இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி ஊடகங்களிடம் கூறுகையில், “பெரியார் நூற்றாண்டின்போது எம்.ஜி.ஆர் அந்த சாலைக்கு பெரியார் ஈ.வே.ரா சாலை என்று பெயர் வைத்திருந்தார். அதை இப்போது இருக்கிற எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த செய்தி எங்களுக்கு நேற்றுதான் தெரியும். இதை பல்வேறு தலைவர்களும் கண்டித்துள்ளனர். அதனால், அரசு மீண்டும் அந்த சாலைக்கு பெரியார் ஈ.வே.ரா சாலை என்று பெயர் வைக்க வேண்டும். அரசு பெரியார் ஈ.வே.ரா சாலை என்று பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயரை அழிக்கும் போராட்டத்தை திவிக முன்னெடுத்துள்ளது.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“