பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் செய்து வருகிறார். நடைபயணத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பேசியபோது, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள், முதல் நொடியில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்றவரின் சிலை, கோயில்களின் முன் இருந்து அகற்றப்படும் என்றார். தொடர்ந்து மதுரை கூட்டத்தின் போதும் இந்த விவகாரம் பற்றி பேசினார்.
அண்ணாமலை தொடர்ந்து பெரியார் பற்றி பேசி வருவதற்கு தி..மு.க, அ.தி.மு.க, பா.ம.க உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தமிழக முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து விட்டார்கள். பீகாரில் அறிவித்து கணக்கெடுப்பு முடித்து, அதனுடைய முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள்.
நேற்று முன்தினம் அது சம்பந்தமாக பீகார் மாநிலத்தில் 65 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் உயர்த்துவோம் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. மொத்தம் 75 விழுக்காடு இட ஒதுக்கீடு பீகார் மாநிலத்தில் வரப்போகிறது.
தமிழகத்தில் சமூக நீதி , சமூக நீதி என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக இருக்கின்ற மதுக்கடைகள் 5000. ஆனால் சந்து கடையாக 25,000 கடை இருக்கிறது. ஒரு பக்கம் மது, ஒரு பக்கம் போதை பொருள் என ஒரு தலைமுறையே போய்விட்டது. அரசு இதைக் கட்டுப்படுத்த வேண்டும்".
பெரியார் பற்றி அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ''இது தந்தை பெரியாருடைய மண். இந்த மண்ணில் இப்படி எல்லாம் பேசக்கூடாது. தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடையாது.
அவர்தான் சமூக நீதியை இந்தியாவிற்கு தொடங்கி வைத்தவர். தந்தை பெரியாரைப் பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. பாமகவின் முன்னோடிகளாக மூன்று பேர் உள்ளனர். ஒன்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ். இந்த 3 பேரை பற்றி யாராவது தவறாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்'' என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“