பெரியார் சிலை மீது ஷூ வீச்சு Live Updates: 'பகுத்தறிவு பகலவன்' என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சிம்சன் அருகே அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், திடீரென தான் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி சிலையின் மீது வீசி எறிந்தார். பின்னர் பெரியாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதையடுத்து, விசிக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை தாக்கி, மறியல் செய்தனர். உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விசாரணையில் அந்த நபரின் பெயர் ஜெகதீசன் என்பதும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.
01:30 PM - பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "பெரியார் சிலையை அவமதித்த செயல் வெட்கக்கேடானது. இந்தச் செயல் திராவிட இயக்கங்களுக்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும். சிலையை அவமதித்த நபரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்றார்.
01:00 PM - பெரியார் சிலை மீது செருப்பு வீசிய ஐகோர்ட் வழக்கறிஞர் ஜெகதீசன்.
12:30 PM - இதுபோன்ற செயல்களை ஆரம்பகட்டத்தில் ஒடுக்கவேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தந்தை பெரியாரை இழிவுப்படுத்துவது தமிழக மக்களை இழிவுபடுத்துவது போன்றது என்றார். மேலும், சிலையை அவமதித்தவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
12:00 PM - தந்தை பெரியார் சிலை மீது ஷூவை வீசியவர் மீது குண்டர் தடுப்பு சட்டதில் கைது செய்யக்கோரி திருமாவளவன் தலைமையில் தொண்டர்கள் அண்ணா சாலையில் மறியல் செய்தனர்.
திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல்
இதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்க: பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை