பெரியார் சிலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் சிலையை அகற்றுவோம் என்கிற கருத்து தொனிக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியது. திரிபுராவில் மாநிலத்தில் இருந்த லெனின் சிலை அகற்றபட்டது போல தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என அவர் கூறியிருந்தார்.
பெரியார் சிலை குறித்த அவரது கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். முகநூல் கருத்தை அடுத்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் உடைக்கும் செயலில் பாஜகவினர் ஈடுப்பாட்டார். இதையடுத்து கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு விசப்பட்டது. அதே போல் சென்னையில் பூணுல் அறுப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
பெரியார் சிலை பிரச்னையில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என கூறி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் இன்று காலை முறையிட்டார். அரசியல் தலைவர் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளதால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சட்ட ஒழுங்கு பாதிக்காத வகையில் காவல்துறை செயல்பட உத்தரவிட வேண்டும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்வதாகவும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
இதனை அவசர வழக்காக பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு அனுமதித்தனர். இதனையடுத்து வழக்கறிஞர் சூரியப்பிராகஷ் சார்பில் மனு தாக்கல் செய்தார் அதில், பிஜேபி தேசிய செயலாளரான ஹெச்.ராஜா முகநூல் கருத்தால் தமிழகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பொது தேர்வுக்கு செல்லும் மாணவர்களும், அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பதட்ட நிலையை தணித்து அமைதி நிலை ஏற்படுத்த டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் காவல்துறை செயல்பட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்
இதையடுத்து, இன்று பிற்பகல் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் சென்னையில் பூனூல் அறுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் பொது தேர்வு நடைபெறும் நேரம் என்பதால் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.