பெரியார் சிலை சர்ச்சை : ஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரி சென்னையில் மறியல்

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி சென்னையில் போராட்டம் நடந்தது. பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி சென்னையில் போராட்டம் நடந்தது. பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்கிற பொருள்பட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 48 மணி நேரத்திற்குள் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பெலோனியா கல்லூரி சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலை (திங்கட்கிழமை) அகற்றப்பட்டுள்ளது. மேலும் பிஷால்கார்க், கோவாய், மோகான்பூர், சாப்ரூம், கோம்லாங், மெலார்க், ஜிரானியா, பெலோனியா, ராம்நகர் மற்றும் அகர்தலாவில் தெற்கு ராம்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் மீதும், ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

திரிபுரா காவல் துறையினர் லெனின் சிலையை அகற்ற காரணமாக இருந்தவர்களையும், அலுவலகங்கள், ஊழியர்களை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காமல், சிலையை இடித்துதள்ளிய புல்டோசர் வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தெற்கு திரிபுராவில் உள்ள சப்ரூம் நகரில் அமைக்கப்பட்டிருந்த லெனின் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது முகநூலில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்து உடைக்கப்பட வேண்டியது ஜாதிவெறியரான ஈ.வெ.ரா.வின் சிலை என்ற கருத்தை பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். ஹெச்.ராஜவின் பதிவையடுத்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி பிரதான சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் 25 ஆண்டுகாலமாக உள்ள பெரியாரின் சிலையை பாஜகவைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் சேதப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஹெச்.ராஜா கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஹெச்.ராஜவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் புதன்கிழமையன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், தேமுதிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு எச்.ராஜாவைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும், புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியதைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

இதில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திரவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் அ.குமரேசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close