பெரியார் சிலை உடைப்பு : சமீபகாலமாக தமிழகத்தில் பெரியாரின் சிலைகளை உடைப்பதும் அவமதிப்பதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 17ம் தேதி பெரியாரின் பிறந்தநாள் அன்று, அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைக் கட்சியினர் மரியாதை செலுத்திய போது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருத்தர் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி பெரியாரின் சிலை மீது வீசினார்.
இதனை பார்த்த விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவர் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் என்று பின்னர் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் பெரியார் சிலை உடைப்பு
திருச்சியில் இருக்கும் சோமரசம்பேட்டை பகுதியில் இருக்கும் அல்லித்துறை பேருந்து நிறுத்ததில் ஒரு பெரியார் சிலை உள்ளது. 1991ம் ஆண்டு அமைக்கப்பட்ட அந்த சிலையை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.
மேலும் படிக்க பெரியார் சிலை மீது செருப்பு வீசியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
எப்போதும் அந்த சிலையின் அருகே இருக்கும் கரும்பலகையில் பெரியாரின் வாசகங்களை எழுதுவது வழக்கம். அதே போல் இன்று காலை 4.45 மணிக்கு எழுத சென்ற போது பெரியார் சிலையில் இருக்கும் கைத்தடி உடைந்து கீழே விழுந்து கிடந்தது. அதனைத் தொடர்ந்து சோமரசம்பேட்டையில் இருக்கும் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை தேடி வருகிறார்கள். சேதப்படுத்தப்பட்ட சிலை சீரமைக்கப்பட்டிருக்கிறது.
தஞ்சையில் பெரியார் சிலை அவமதிப்பு
இதே போன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கவராப்பட்டு என்ற இடத்தில் பெரியார் சிலைக்கு செருப்பினால் ஆன மாலை அணிவித்திருந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.