பெரியார் சிலையை அகற்ற ஹெச்.ராஜா கருத்து வெளியிட்ட விவகாரம், கொந்தளிப்பை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்தார்.
பெரியார் சிலையை அகற்றுவோம் என்கிற கருத்து தொனிக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து கூறினார். திரிபுராவில் மார்க்சிய புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக.வினர் அகற்றியதை வரவேற்று வெளியிட்ட பதிவில் இந்த கருத்தை ஹெச்.ராஜா கூறினார்.
பெரியார் சிலை குறித்து ஹெச்.ராஜா குறிப்பிட்டது, தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் காரசாரமாக கண்டனக் கருத்துகளை தெரிவித்தனர். 2-வது நாளாக இன்றும் (மார்ச் 7) அது தொடர்பான நிகழ்வுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. அது தொடர்பான LIVE UPDATES
மாலை 3.00 : பெரியார் சிலை விவகாரத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காவல்துறை நிலைநாட்ட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு உத்தரவிட்டது.
பகல் 1.25 : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘வேலூரில் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக கைதான பிரான்சிஸ் என்பவருக்கும், இந்திய கம்யூ. கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை’என முத்தரசன் விளக்கம் அளித்தார்.
பகல் 1.20 : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தந்தை பெரியார் சிலை சேதம் தொடர்பான அமித்ஷாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. ஆனால், சிலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுத்தக் கட்சித் தலைமை, அதற்கு தூண்டியவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என கேள்வி விடுத்தார்.
பகல் 1.15 : டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, ‘ஹெச்.ராஜா மீது அவரது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ என்றார்.
பகல் 1.00 : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘பெரியார் சிலை கருத்து குறித்து ஹெச். ராஜா விளக்கம் அளித்துவிட்டார். திரிபுராவில் லெனின், தமிழகத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதை பாஜக ஏற்றுக்கொள்ளாது.’ என்றார்.
பகல் 12.45 : மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையை திசைதிருப்பவே பெரியார் சிலை சர்ச்சை எழுந்திருப்பதாக கருதுகிறேன். எனவே அந்த திசைதிருப்பல் நடக்காமல் தடுக்கும் கடமை மீடியாவுக்கு இருக்கிறது. இந்த விஷயத்தில் அமித்ஷா அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லை.
இதற்காக பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு என்பது தேவையில்லை. தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம். ஹெச்.ராஜா மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதுதான் நேர்மையான செயல்!’ என்றார்.
பகல் 11.45 : பெரியார் சிலை உடைப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையீடு செய்தார். சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். மதியம் அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்தது.
இனிமேல் #ஹெச்ராஜா சமூக வலைத்தளங்களில் ஏதேனும் பதிவிட்டால், அது அவருடைய சொந்தப் பதிவா அல்லது அவருக்கே தெரியாமல் யாராவது பதிவு செய்து விட்டார்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? வெட்கங்கெட்ட பிழைப்பாகி விட்டதே ! @HRajaBJP
— SubaVeerapandian (@Suba_Vee) March 7, 2018
பகல் 11.40 : பாஜக மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிட வந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்தவர்களை சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே போலீஸார் மடக்கினர். அவர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்கள் உள்பட போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக போலீஸார் அப்புறப்படுத்தினர்.
பகல் 11.20 : டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ‘சிலைகளை உடைப்பதில் எனக்கோ, பாஜக.வுக்கோ உடன்பாடு இல்லை. சித்தாந்த ரீதியாக மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம். எனவே அந்தப் பதிவை மட்டுமல்ல, எனது அனுமதி இல்லாமல் அந்தப் பதிவை போட்ட ‘அட்மின்’னையும் நீக்கிவிட்டேன்.
பெரியார் சிலை குறித்த பதிவு, எனக்கு தெரியாமல் எனது அட்மின் செய்த பதிவாகும்- ஹெச்.ராஜா #HRaja #PeriyarStatue pic.twitter.com/dBmebuOZTI
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 7, 2018
ஆனாலும் எனது முகநூல் பக்கத்தில் அது இடம் பெற்றதால அது யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறினார்.
முதலில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும், பிறகு இந்தியிலும் இதை கூறினார் ஹெச்.ராஜா. நிருபர்களின் இதர கேள்விகளுக்கு பதில் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
பகல் 11.15 : திரிபுராவில் லெனின் சிலை, தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னைகளை கிளப்பி அமளியில் ஈடுபட்டன.
பெரியார் சிலை உடைப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களால் இனி கனவிலும் கூட பெரியார் சிலையை அகற்றும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
* சிலையை அகற்றும் எண்ணம் யாருக்காவது மிச்சமிருந்தால் தொட்டுப் பார்க்கட்டும் - ஸ்டாலின்#MKStalin #DMK #PeriyarStatue pic.twitter.com/jSR8496e4I
— Thanthi TV (@ThanthiTV) March 7, 2018
பகல் 11.15 : மோடி, அமித்ஷா அதிருப்தி, ஹெச்.ராஜா வருத்தம் ஆகிய ரீயாக்ஷன்களுக்கு பிறகும் தமிழ்நாடு முழுவதும் திராவிட இயக்கங்களும் இடதுசாரி அமைப்புகளும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல இடங்களில் ஹெச்.ராஜாவின் உருவப் பொம்மைகளை எரித்தனர்.
And you have a BJP leader threatening to demolish #Periyar statue..wonder what gives them the guts to do such things and speak this language..
— khushbusundar (@khushsundar) March 6, 2018
பகல் 11.10 : திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்புக்கு காரணமான நகர, ஒன்றிய செயலாளர் முத்துராமனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி, மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்தார். முத்துராமனை போலீஸ் கைது செய்தது.
பகல் 11.00 : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தொடர்புகொண்ட பிரதமர் மோடி, திரிபுரா மற்றும் தமிழ்நாடு நிகழ்வுகளுக்கு அதிருப்தி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில், தலைவர்களின் சிலைகளை வைத்து பிரச்னை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
எச்.ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் #HRaja #BJP #TamilisaiSoundararajan #PeriyarStatue @HRajaBJP pic.twitter.com/qQyrljtqxA
— Thanthi TV (@ThanthiTV) March 7, 2018
காலை 10.45 : திரிபுரா மற்றும் தமிழ்நாட்டில் நடந்த சிலை உடைப்புகளுக்கு பாஜக தலைவர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதில் தொடர்புடைய பாஜக.வினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இரண்டு மாநில பாஜக தலைமைக்கும் உத்தரவிட்டிருப்பதாக அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
I have spoken to the party units in both Tamil Nadu and Tripura. Any person associated with the BJP found to be involved with destroying any statue will face severe action from the party.
— Amit Shah (@AmitShah) March 7, 2018
காலை 10.00 : சென்னை திருவல்லிக்கேணியில் பிராமணர்கள் 6 பேரின் பூனூலை மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் அறுத்தது. பெரியார் சிலை சர்ச்சையின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
காலை 9.45 : சென்னை தி.நகரில் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து தி.நகர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
காலை 9.30 : கோவையில் பாஜக அலுவலகம் மீது இன்று அதிகாலையில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் இல்லை.
காலை 9.00 : நேற்று இரவு திருப்பத்தூரில் பெரியார் சிலை உடக்கப்பட்டது. அது தொடர்பாக உள்ளூர் பாஜக நிர்வாகி முத்துராமன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.