பெரியார் சிலை சர்ச்சை வெவ்வேறு கோணங்களில் பயணிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க!’ என சவால் விடுத்தார்.
பெரியார் சிலையை அகற்றுவது தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட கருத்து தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. பாஜக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அந்தப் பதிவை ஏற்கவில்லை. கடைசியாக ஹெச்.ராஜாவும் அந்தப் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து நீக்கியதுடன், தனக்கு தெரியாமல் தனது முகநூல் பக்க நிர்வாகி அப்படி பதிவு செய்துவிட்டதாக விளக்கம் தெரிவித்தார்.
பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிர்வினையாற்றுவதாக கூறிக்கொண்டு திராவிட இயக்கத்தினர் சிலரும் ஆங்காங்கே அத்து மீறினர். கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், பிராமண சமூகத்தினர் சிலரது பூனூலை அறுத்தனர். இது தொடர்பாக நால்வரை போலீஸார் கைது செய்தனர்.
பூனூல் அறுப்பு நிகழ்வு, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத் தொடர்பாளர்களில் ஒருவரான அமெரிக்கை வி.நாராயணன் அந்த நிகழ்வை கண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கையில் இறங்கினார். மேல் சட்டை அணியாமல் பூனூல் அணிந்தபடி உள்ள தனது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் ‘புரொபைல்’ படமாக வைத்தார் அமெரிக்கை நாராயணன்.
பூனூல் அறுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதே படத்தை வெளியிட்டு, ‘எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்களை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ என பதிவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் நிர்வாகியான அமெரிக்கை நாராயணனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களை கிளப்பியிருக்கிறது.