பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். குடி போதையில் சிலையை உடைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
பெரியார் சிலை உடைப்பு நிகழ்வுகள் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையை நேற்று முன்தினம் யாரோ உடைத்தனர். தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரை நுழைந்த நிலையில் இந்த சிலை உடைப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது.
பெரியாரின் முழு உருவச் சிலையை இங்கு கடந்த 25-4-2013 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். சில மர்ம நபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்தது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரித்து வந்தனர்.
பெரியார் சிலையை அரசு உத்தரவுப்படி சீரமைத்து பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். இந்நிலையில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எஃப்) வீரர் செந்தில்குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
செந்தில்குமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘நான் சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலை செய்து வருகிறேன். குடிபோதையில் சிலையை உடைத்துவிட்டேன்’ என கூறியதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து செந்தில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.