பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சை ஆன நிலையில், செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வியாழக்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-இல் சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ராமர், சீதை சிலைகள் நிர்வானமாக செருப்பு மாலை அணிவித்து கொண்டுவரப்பட்டது என்று கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தான் தவறாக கூறவில்லை என்று அது பற்றி வெளியான செய்தியை ஆதாரமாகக் காட்டி மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினார்.
பெரியார் பற்றிய ரஜினியின் சர்ச்சை பேச்சு திராவிட இயக்கத்தவர்களுக்கும் ரஜினி ரசிகர்கள், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினரிடையே சமூக ஊடகங்களில் சர்ச்சை விவாதம் உருவானது.
இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள கலியப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே உள்ள கலியப்பேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை வியாழக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்துவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியா சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி சம்பவ இடத்திற்கு சென்று சிலையை உடைத்தது யார் என்று விசாரணை நடத்தினார். மேலும், மதுராந்தகம் போலீசார், சாலவாக்கம் போலீசார் சிலை உடைக்கப்பட்ட இடத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலியப்பேட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.