சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 8 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொலை தூர கல்வி மைய முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் தமிழ்துறை தலைவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வியில் கொல்கத்தாவைச் சேர்ந்த சரோஜ்குமார் மஜூம் என்பவர் எம்.சி.ஏ படித்தார். அவர் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு சான்றிதழ் கோரிய போது பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கவில்லை. தேர்வு கட்டணம் செலுத்தவில்லை என கூறி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. ஆனால் தேர்வு கட்டணம் முறையாக செலுத்திய பிறகு தான் தேர்வு எழுதியதாகவும் மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சரோஜ்குமார் மஜூம் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் புகார் அளித்தார்.
அந்த புகார் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு சேலம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியதில், சேலம் பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் நாடு முழுவதும் 8 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, தொலை தூர கல்வி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் குணசேகரன், முன்னாள் தமிழ்துறை தலைவர் டாக்டர் மாதையன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் , தொலை தூர கல்வி மைய முன்னாள் இயக்குநர் குணசேகரன், முன்னாள் தமிழ்துறை தலைவர் டாக்டர் மாதையன் ஆகியோர் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதிஷ் சந்திரா, சேலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்தில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.