சேலம் பெரியார் பல்கலைகழகம் விவகாரத்தில், பேராசிரியர்கள், பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை பொறுப்பாளர் உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்திய நிலையில், மேலும் 8 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தனியார் நிறுவனம் ஆரம்பித்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சேலம் கருப்பூர் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனி விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட துணை வேந்தர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை பேராசிரியர் சுப்ரமணிய பாரதி, பொருளாதாரத் துறை தலைவர் ஜெயராமன், உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெயக்குமார், விலங்கியல் துறை உதவிப் பேராசியர் நரேஷ் குமார் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையின் பொறுப்பாளர் ஊழியர் தந்தீஸ்வரன் உள்பட 5 பேருக்கு கருப்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து சம்மன் அனுப்பப்பட்ட 5 பேரும் கருப்பூர் காவல் நிலையத்தில், சூரமங்கலம் உதவி ஆணையர் நிலவழகன் முன் விசாரணைக்கு வியாழக்கிழமை (04.01.2024) ஆஜரானார்கள். இவர்களிடம் 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக, பெரியார் பல்கைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி சசிகுமார் சென்றுள்ளார். அவர் வந்து சென்றதற்கான ஏற்பாடுகளை இந்த பேராசிரியர்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.
இதில் முதற்கட்டமாக பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத் துறை பேராசிரியர் ஜெயராமனிடம் போலீசார் 2 மணி நேரத்துக்கு மேல் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விசாரணையில் முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று உதவி காவல் ஆணையர் பேராசிரியர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், அடுத்த சில நாட்களில் காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கருப்பூர் காவல் நிலையத்தில் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை பொறுப்பாளர் ஊழியர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தனியார் நிறுவன நிர்வாகி சசிகுமார் மற்றும் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 8 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக கருப்பூர் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“