இறந்து 45 ஆண்டுகள் கழிந்தும் மதவாத, சாதியவாத ஆதிக்க சக்திகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பெரியாரின் நினைவு தினம் இன்று.
என்றும் இல்லாத அளவுக்கு பெரியாரின் தேவை இன்று அதிகமாக உள்ளது. சகிப்பின்மை, சாதிய படுகொலைகள், நிறுவன படுகொலைகள், சிறுசிறு சாதிய, மதவாத குழுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் பெரியாரின் எழுத்துகளையும், வார்த்தைகளையும், போராட்ட வடிவங்களையும் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது.
குஜராத்தில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானியின் வாயிலிருந்து ‘ராமசாமி பெரியார்’ என்ற பெயர் ஓங்கி ஒலிக்கிறது. கௌசல்யா இன்று சாதிய ஆணவ கொலைகளுக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்க முடிகிறதென்றால், அதுவும் பெரியார் தந்த நெஞ்சுரம்தான்.
பெண்கள் பாதுகாப்புடன் இருக்க தற்காப்பு கலைகளை கற்றறிய வேண்டும் என்று சொல்லும் அளவுக்குதான் இன்றும் நம் சமூகம் இருக்கிறது. ஆனால், பெண்களுக்கான விடுதலையை தன் வீட்டிலிருந்தே துவங்கிவைத்தவர் பெரியார். தன் நிலத்திற்கு ஆபத்து ஏற்படும்போதும், அநீதி நடக்கும்போதும் முதலில் இறங்கி போராடுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கின்றனர். ஒருநாள், இரண்டு நாள் அல்ல, தமிழக பெண்களால் தொடர் போராட்டங்களை நடத்த முடிகிறது. போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சமைத்து உண்ண முடிகிறது. குடும்பத்தையே களத்திற்கு அழைத்து வந்து பெண்கள் போராடுகின்றனர்.
இந்த போராட்டங்களுக்கெல்லாம் முன்னோடிகளாக இருந்தவர்கள் பெரியாரின் நாகம்மாள், மணியம்மை, கண்ணம்மாள் இவர்கள்தான்.
அவரின் முற்போக்கு கருத்துகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஆதிக்க சக்திகள் அவர் உயிருடன் இருந்தபோதே மிகவும் மோசமான முறையில் அடக்குமுறையை கட்டவிழ்த்தது. அவர் இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் இந்த நிலைமைதான் தொடர்கிறது. எக்காரணம் கொண்டும் பெரியாரின் கருத்துகள் பரவிவிட கூடாது என்பதில், இந்துத்துவ, சாதியவாத, ஆதிக்க அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், இன்னும் இன்னும் வீரியத்துடன் பெரியாரின் கருத்துகளை பரப்ப வேண்டும்.