அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
எனவே, அதிமுக கட்சியின் பெயா், சின்னம், கொடியை அவரும், அவரது ஆதரவாளா்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்’, என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களை கேட்டறிந்தார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் மார்ச் 12 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், அதிமுக பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“