petition against rajini withdraws periyar controversy madras high court - பெரியார் சர்ச்சை: ரஜினிக்கு எதிராக வழக்கு பதியக் கோரிய மனு - சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வழக்கு பதிய கோரிய திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்திலும், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் புகார் அளிக்கபட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுகள் தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜராகியிருந்த தமிழக குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன், புகார் அளிக்கப்பட்ட உடனே அதன் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்கப்படமால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அதனை தொடர்ந்து உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும். இதனையடுத்து சம்மந்தப்பட்ட
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றவழக்கு பதிவு செய்து நிவாரணம் பெற வேண்டுமெனவும் அங்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் தான் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும். ஆனால் மனுதாரர் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்றார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் இந்தக் கருத்தை தானாக தெரிவிக்கவில்லை எனவும் பத்திரிக்கையில் வந்த செய்தியே மேற்கோள் காட்டி
பேசியதாகவும் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ. நடராஜன் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி இந்த வழக்கு தற்போதைய நிலையில் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்தார். இந்த வழக்கை பதிவுத்துறையில் வழக்கு எண் வழங்கியது தவறு, வழக்கு எண் வழங்க பதிவுத்துறையை நிர்பந்தம் செய்யபட்டுள்ளதாக கருதுவதாக நீதிபதி தெரிவித்தார்.
ஒரு புகார் மீது எப்படி விசாரணை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு காவல்துறை அல்லது விசாரணை அதகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த அளித்த தீர்ப்பின் படி உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதன் பிறகு தான் உயர்நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டும் இந்த சட்ட நடைமுறைகள் முழுமையாக இந்த வழக்கில் பூர்த்தி செய்யப்படாமல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
தந்தை பெரியார் ஒரு சிறந்த தலைவர் என்றும் இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை என தெரிவித்த நீதிபதி ராஜமாணிக்கம், விதிகளை மீறி வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கை பொறுத்தவரை, நாங்கள் உயர் அதிகாரி புகார் அளித்ததாகவும் எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகார் அளிக்கப்படும் பொழுது அதன் மீது முகந்திரம் உள்ளதா ? என்பது குறித்த ஆரம்ப கட்ட விசாரணை நடத்த காவல்துறைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் பிறகு உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்து 15 கால அவகாசம் அளிக்க வேண்டும்.
காவல்துறையின் பணிகளை நீதிமன்றங்கள் மேற்கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதி விசாரணை சரியாக நடைபெறுகிறதா? என்பதை மட்டுமே கண்காணிக்க முடியும். ஒரு புகார் மனு மீது முடிவெடுக்க கால அவகாசம் அளிக்காமல் வழக்கு தொடர்ந்து சரியல்ல எனவும் நீதிபதி தெரிவித்தார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் சட்ட விதிகளின்படி 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தற்போதைய நிலையில் இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.