மதுரையில் அ.தி.மு.க மாநாடு ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரான பிறகு, தொண்டர்களும் நிர்வாகிகளும் தனது தலைமையின் கீழ்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் விதமாக, மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டுக்காண பணிகளில் அ.தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் மும்முரமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க மாநாட்டில் பங்கேற்க சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க தொண்டர்களை அழைத்து செல்ல சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மதுரை வளையங்குளம் பகுதியில் அ.தி.மு.க மாநாட்டு மேடை, பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் மனுதாக்கல் செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர், அ.தி.மு.க மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநாட்டிற்காக மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையில்லை சான்று பெறவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
அ.தி.மு.க மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”